கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
கம்பம், கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய அக்னிசட்டி எடுத்து, வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
கம்பத்தில் சிறப்புமிக்க கவுமாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் 22 நாட்கள் சித்திரை திருவிழா நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்துவார்கள். விதவிதமான அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை துவங்கியது. பின், விடிய விடிய நடைபெற்றது. தொடர்ந்து நேற்றும் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். தொடர்ந்து பால்குடம் எடுத்தல், அலகு குத்தி வருதல்,. ஆயிரம் கண்பானை எடுத்தல், உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் செய்து பக்தர்கள் நிறைவேற்றினர். பின், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து, பூஜைகள் நடந்தன. அதன்பின், பூக்குழி இறங்குதல் நடந்தன. சித்திரைத் திருவிழாவில் வீதிக்கு வீதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கம்பம் நகரமே விழாக்கோலம் பூண்டது. தொடர்ந்து திருவிழா வரும் மே 8 வரை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கிராமக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.