ஏழாயிரம்பண்ணையில் தேரோட்டம்
சாத்துார், ஏழாயிரம்பண்ணை ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா தேரோட்டம் நடந்தது. இக்கோயில் பொங்கல் விழா கடந்த ஏப்ரல் மாதம் 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் நகர் வலம் வந்தார். அப்போது பக்தர்கள், அம்மன் ஊர்வலத்திற்கு முன்பு பாசுரம் பாடியும் கோலாட்டம் ஆடியும் வலம் வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்ரல் 29ல் நடந்தது. பக்தர்கள் பலர் பொங்கல் வைத்தும், முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர். நேற்று மாலை 5:00மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க தேரோட்டம் நடந்தது. கிராம மக்கள், பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதி வழியாக வலம் வரச்செய்தனர். ஒம்சக்தி பராசக்தி என பக்தி கோஷமிட்டனர். இரவு 10:30 மணிக்கு திருவிழா கொடியிறக்கம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.