நத்தம் உலுப்பகுடி முத்தாலம்மன் கோயில் விழா
நத்தம்: நத்தம் அருகே உலுப்பகுடியில் முத்தாலம்மன் மற்றும் வல்லடியார் சுவாமி புரவி எடுப்பு திருவிழா நடந்து வருகிறது.
கடந்த மே 2 அன்று காலை தோரண மரம் ஊன்றப்பட்டு, ஊரணிக் கரையில் இருந்து சுவாமி அழைப்பு நடந்தது. இரவு முத்தாலம்மன் கண் திறக்கப்பட்டு கோயிலுக்கு அழைத்து வரப் பட்டது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு படைத்தனர்.
நேற்று (மே 3) காலை கரந்தமலையில் இருந்து கன்னிமார் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பக்தர்கள் அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பகலில் கரகம், பால்குடம், முளைப்பாரி எடுப்பு நடந்தது. மாலையில் பொங்கல் வைத்து, கிடா வெட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.
இன்று (மே 4) காலை வல்லடியார் சுவாமி கரகம், கனினிமார், முன்னோடி கருப்பு சுவாமி புரவி எடுப்பு நடக்கிறது. இரவு சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நாளை மாலை சுவாமிகள் புரவி கந்தமலை சென்றடைவதுடன் விழா நிறைவடைகிறது.