திருப்பதியில் திருமலை ஏழுமலையானை தரிசிக்க,தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறை அமல்
திருப்பதி:திருமலை ஏழுமலையானை தரிசிக்க, இனி, பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. தர்ம தரிசன பக்தர்களுக்கு, நேர ஒதுக்கீடு முறையை தேவஸ்தானம் அமல்படுத்தி உள்ளது.
தேவஸ்தானம்ஆந்திர மாநிலத்தில் உள்ள, திருப்பதி, திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும், இரண்டு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்துதிரும்பும் வகையில், தேவஸ்தானம் வழிவகை செய்து வருகிறது.இதன்படி, முதலில், 300 ரூபாய் விரைவு தரிசன பக்தர்களுக்கு, நேர ஒதுக்கீடு முறையை தேவஸ்தானம் அமல்படுத்தியது.
கடந்தாண்டு, ஜூனில், பாதயாத்திரை பக்தர்களுக்கும், இதே நடைமுறையை, தேவஸ்தானம் அமல்படுத்தியது.இந்த நடைமுறைப்படி, பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருக்காமல், டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு திருமலைக்கு சென்றால், இரண்டு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்புகின்றனர்.
அதேபோல், தர்ம தரிசன பக்தர்களுக்கும், தேவஸ்தானம் நேற்று முன்தினம்(மே 2)ல் இரவு முதல், நேர ஒதுக்கீடு முறையை நிரந்தரமாக அமல்படுத்தி உள்ளது.
ஏழுமலையானைதரிசிக்க விரும்பும் பக்தர்கள், இதற்காக ஏற்படுத்தி உள்ள கவுண்டர்களுக்கு சென்று, தங்கள் ஆதார் அட்டையை அளித்து,தரிசன டோக்கன்களை பெற வேண்டும்.
புகைப்படம் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு காத்திருப்பு அறைகளுக்கு சென்றால், இரண்டு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள், அதற்கு பதிலாக, வாக்காளர் அட்டையை பயன்படுத்தலாம். ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டைஇல்லாத, 12 -18 வயதிற்குட் பட்டவர்களுக்கு, கருவிழி ரேகை புகைப்படம் எடுக்கப்பட்டு,தரிசன டோக்கன் அளிக்கப்படும்.இதற்காக திருப்பதி, திருமலை, நடைபாதை மார்க்கங்களில், 109 கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரூ.4 கோடி வசூல் திருமலை, ஏழுமலையானை தரிசிக்க வரும்பக்தர்கள், தரிசனம் முடித்து திரும்பிய பின், தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்தி வருகின்றனர். தற்போது, கோடை விடுமுறையை தொடர்ந்து, பக்தர்களின் வருகை அதிகம் இருப்பதால்,உண்டியல் காணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (மே 2)ல் மாலை முதல், நேற்று (மே 3)ல் மாலை வரை, பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், 4.11 கோடி ரூபாய் வசூலாகிஉள்ளதாக, தேவஸ்தான நிர்வகம் தெரிவித்துள்ளது.