காசிக்கு நிகரான சிவன் கோயில்
சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே குகன் பாறையில் இருந்து சாத்தூர் செல்லும் வழியில் செவல்பட்டி நடுச்சத்திரத்தில், காசிவிஸ்வநாதர் கோயிலானது பண்டை கால தொன்மையை பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளது. 1000 ஆண்டு பழமையான இக்கோயிலில், காசிக்கு அடுத்தப் படியாக நந்தி பகவான் அன்னபூரணியை பார்த்தபடி உள்ளார். சிவனுக்கே அன்னமிட்ட அன்ன பூரணி என்பதால், நந்தி பகவான் திரும்பி இருப்பதாக பூஜாரி ஞான குரு தெரிவித்தார். இதுதவிர சூரியனும், குபேரசனீஸ்வரரும் ஒரே சன்னதியில் இருப்பது மிகவும் பாக்கியம். அந்த வகையில் சூரியன் கிழக்கை நோக்கியும், சனீஸ்வரர் வடக்கு திசையிலும், கேட்பதை விட அள்ளிக் கொடுக்கும் அட்சயபாத்திரம் போல் வீற்றிருக்கின்றனர். மன்மதக் கடவுள் கல்தூணில் சிற்பமாக உள்ளார். இவரை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணமாகும் என்பது ஐதீகம். பிரதோசம், சனிப்பெயர்ச்சி போன்ற விசேஷ நாட்களில் பூஜைகள் தொடர்ச்சியாக நடக்கிறது. கோயில் தூண்களில் இருக்கும் சிற்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பாண்டிய மன்னர்களால் இக்கோயிலை கட்டியதாக ஆய்வு குறிப்புகள் கூறுகின்றன.