உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் திருக்கைத்தல சேவை கோலாகலம்!

ஸ்ரீரங்கத்தில் திருக்கைத்தல சேவை கோலாகலம்!

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கைத்தல சேவை கோலாகலமாக நடந்தது. இன்று வேடுபறி விழா நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் கடந்த ஐந்தாம் தேதி திறக்கப்பட்டது. தற்போது ராப்பத்து விழா நடந்து வருகின்றது. விழாவின் ஏழாம் நாள் விழாவான திருக்கைத்தல சேவை நேற்று நடந்தது. பிற்பகல் 3.15 மணிக்கு ஸ்ரீரெங்கநாதர் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மாலை 5.45 மணிக்கு திருமாமணி மண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் ரெங்கநாதர் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து நம்மாழ்வார் பராங்குச நாயகி திருக்கோலத்தில் ஸ்ரீரெங்கநாதர் திருக்கைத்தல சேவை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருக்கைத்தல சேவையை கண்டுதரிசித்தனர். உபயக்காரர் மரியாதைக்கு பிறகு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியங்கள் முழங்க மூலஸ்தானத்தை அடைந்தார். இன்று திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீரெங்கநாதர் குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்பட்டார். இதைத்தொடர்ந்து மணல் வெளியில் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருமங்கை மன்னனுக்கு ஞானம் பிறந்த கதை நடித்துக் காட்டப்படுகின்றது. இந்த கண்கொள்ளாகாட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர். இதன் பிறகு அரையர் சேவை நடக்கிறது. உபயக்காரர் மரியாதைக்கு பிறகு திருமாமணி மண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியங்கள் முழங்க ஸ்ரீரெங்கநாதர் மூலஸ்தானத்தை அடைகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !