உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹெத்தையம்மன் விழாவில் திரண்ட பக்தர்கள்! உள்ளூர் விடுமுறையால் உற்சாகம்!

ஹெத்தையம்மன் விழாவில் திரண்ட பக்தர்கள்! உள்ளூர் விடுமுறையால் உற்சாகம்!

கோத்தகிரி : கோத்தகிரி பேரகணி ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவில், கலாச்சார உடை அணிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுக மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. பழமை வாய்ந்த பேரகணி ஹெத்தையம்மன் மடிமனையில், நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலாச்சார உடையணிந்த பக்தர்கள், காணிக்கை செலுத்தி அம்மனை வழிப்பட்டனர். பகல் 1.30 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, கோத்தகிரி, குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து, கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை (வெள்ளி) காத்துகுளி மடிமனையிலும், சனிக்கிழமை ஒன்னதலை மடிமனையிலும் திருவிழா நடக்கிறது.

உள்ளூர் விடுமுறைக்கு நன்றி: நீலகிரியில் வாழும் படுக மக்களின் கோரிக்கைக்கு இணங்க, இந்தாண்டு முதல் ஹெத்தையம்மன் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதை, ஒட்டு மொத்த சமுதாய மக்களும் பாராட்டி, வரவேற்றுள்ளனர். மாநில அரசு அறிவித்த உள்ளூர் விடுமுறை தினம் என்பதால், நேற்று திருவிழாவுக்கு வந்த பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது; பக்தர்களும் உற்சாகத்துடன் விழாவில் பங்கேற்றனர். மாநில அமைச்சர்கள் தாமோதரன், வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ., புத்திசந்திரன் ஆகியோர் அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !