உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, கேளையூர் கிராமத்தில், தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கோடு, ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புளியூர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, திரவுபதி அம்மன் கோவில் அருகில், கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர்.

இது குறித்து, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கல்வெட்டில், திரிபுவன சக்கரவர்த்தி சிரிசுந்தர பாண்டியரின் ஆட்சிக்காலத்தில், மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள், சேலநாடு என்றும், இப்பகுதியில் சேலஞ்சுற்றி என்பவர் பொறுப்பாளராக இருந்துள்ளார் என்றும், தற்போதுள்ள கோவிலூர் கிராமத்தை, பெருமாமலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில், வானீஸ்வரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனை, கூடலுடையார் என்று அழைத்துள்ளனர். கேளையூர் பகுதியில் உள்ள, பாறைக்கரை என்ற இடத்தின் வடக்கு பகுதியை, இரண்டு சூலக்கல்லுக்கு தானமாக விடப்பட்டுள்ளது என்றும், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே பகுதியில், 2,500 ஆண்டு பழமையான, ஆறடி உயரம் கொண்ட நெடுங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொன்மையான நாகரீகத்தை கொண்ட, தொல்குடிகள் இங்கு வாழ்ந்ததை கண்டறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !