2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்று ஆவண பதிவுக்குழுவைச் சேர்ந்த தமிழ்செல்வன், டேவீஸ், மதிவாணன் ஆகியோர் அடங்கிய, 12 பேர் கொண்ட குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டம், அகரம் வெப்பாளம்பட்டி அருகே, துர்கம் மலைப்பகுதியில் ஆய்வு நடத்தினர். இதில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வெள்ளை நிற பாறை ஓவியங்களை, அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து, வரலாற்று குழுவினர் கூறியதாவது: மலை மேல் மராட்டியர்கள் காலத்தில், பாதி கட்டப்பட்ட நிலையில் கோட்டைச் சுவர்கள் உள்ளன. நீர் தேக்கப்படுவதற்காக, சிறு தாழ்வான பகுதியில், ’ப’ போன்ற வடிவத்துடன் நீர்தேங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலையின், பாதி உயரத்தில் இயற்கையாக அமைந்துள்ள, குகையின் உள் பகுதியில், 2,000 ஆண்டுகளுக்கு முன், வரைந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், சதுர வடிவில் ’ஙீ’ குறியிட்டுள்ள ஓவியம், சிந்து சமவெளி நாகரிகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கோபுர வடிவத்தில் உள்ள, ஓவியம் மூதாதையர்களின் வழிபாட்டை நினைவுப் படுத்துவதாகவும், அவர்கள் பயன்படுத்திய விளக்கை போன்றும் உள்ளது. இவை, வெண்சாந்து ஓவியங்கள் என்பதால், வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.