குலதீபமங்கலம் கோவில் தேரோட்டம், தீமிதி விழா
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தில் உள்ள பழமையான தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில்‚ கடந்த மாதம் 20ம் தேதி‚ கொடியேற்றத்துடன் பிரம் மோற்சவ விழா துவங்கியது. தினசரி பாரதக்கதை‚ சுவாமி புறப்பாடு நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 6ம் தேதி இரவு அலங்கரிக்கப்பட்ட திரவுபதி சமேத அர்சுணன் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடிக்க, தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட கரகம் சுவாமியுடன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. மாலை5:00 மணிக்கு‚ கரகம் தீ குண்டத்தில் இறங்க தொடர்ந்து வேண்டுதல் உள்ள பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலுார் டி.எஸ்.பி.‚ வீமராஜ் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.