உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை கோயில் புதிய தேரில் கொடுங்கைகள் பொருத்தும் பணி தீவிரம்

மானாமதுரை கோயில் புதிய தேரில் கொடுங்கைகள் பொருத்தும் பணி தீவிரம்

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டு வரும் சோமநாதர் வைரத்தேர் வெள்ளோட்டம் வருகிற பிப்.22ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரம்பாலான கொடுங்கைகள் ராட்சச கிரேன் மூலம் பொருத்தப்பட்டு வருகிறது.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடைபெறும் போது 2 பெரிய தேர்களில் தனித்தனியாக சுவாமியும், அம்மனும் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தனர். இதில் சோமநாதர் சுவாமி சென்ற தேர் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அம்மன் சென்ற பெரிய தேரில் சோமநாதர் சுவாமியும், அதற்குப் பின்னால் ஒரு சிறிய தேரில் அம்மனும் தேரோட்ட விழாவின்போது வீதி உலா வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சோமநாதர் சுவாமிக்கு புதிய தேர் செய்ய வேண்டுமென பக்தர்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக புதிதாக தேர் செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இத்தேருக்கானபிரதிஷ்டை,வெள்ளோட்ட விழாவும், தேரடி கருப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவும் வருகிற பிப். 22ம் தேதி நடைபெற உள்ளது இதற்காக தேரின் மேற்பரப்பில் சட்டங்களுக்கு மேலே பிரம்பலான கொடுங்கைகளை கொண்டு அலங்காரம் செய்யப்படுவது வழக்கமாக உள்ள நிலையில் நேற்று மதியம் ராட்சச கிரேன்கள் மூலம் வர்ணம் தீட்டப்பட்ட கொடுங்கைகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்த உடன் தேர் அலங்காரம் செய்யும் பணிகள் துவங்க உள்ளது. இதனை தேவஸ்தான அதிகாரிகள் சிவாச்சாரியார்கள் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !