பழநி முருகன் கோவிலில் நகரத்தார் காவடி குழுவினர் சுவாமி தரிசனம்
பழநி; பழநி தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரை ஆக வருகை புரிந்த நகரத்தார் காவடி குழுவினர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி கோயிலுக்கு குன்றக்குடியில் இருந்து இருந்து நகரத்தார் காவடி குழுவினர் பாரம்பரியமாக ஆண்டு தோறும் வருகை புரிந்து வருகின்றனர். 400 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர். நகரத்தார் குழுவினர் விரதம் இருந்து பாதயாத்திரை ஆக காவடி எடுத்து வந்தனர். அரண்மனை பொங்கல் ஐயா தலைமையில் வைரவேல் மாட்டு வண்டியில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. 364 மயில் காவடிகள் பாதயாத்திரை ஆக கொண்டுவரப்பட்டது. பழநி நோக்கி வரும் வழிகளில் காவடிகளுக்கு சிறப்பு வரவேற்பு, பூஜைகள் நடைபெற்றது. பழநிக்கு ஜன.31 அன்று வருகை புரிந்தனர். ஆவணி மூல வீதியில் உள்ள மடத்தில் வைரவேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன் பின் நேற்று மக நட்சத்திரத்தில் உச்சிக்கால பூஜைக்கு பின் முருகன் கோயிலுக்கு மயில் காவடிகளுடன் தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற பிறகு பாதயாத்திரையாக மீண்டும் கிளம்பி சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வர்.