உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறில் பஞ்ச ரத்ன கீர்த்தனை இசை மழை!

திருவையாறில் பஞ்ச ரத்ன கீர்த்தனை இசை மழை!

தஞ்சாவூர்:திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில், ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள், ஒரே இடத்தில் கூடி, பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து, தியாகராஜருக்கு நேற்று, இசையஞ்சலி செலுத்தினர்.சத்குரு தியாகராஜரின், 165வது ஆராதனை விழா, திருவையாறில் கடந்த 9ம் தேதி துவங்கியது. விழாவை, திருப்பதி தேவஸ்தான தலைவர் கனிமூரி பாபிராஜு எம்.பி., துவங்கி வைத்தார். தொடர்ந்து, இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்தன.தியாகராஜர் முக்தி அடைந்த தினமான நேற்று காலை, திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில், சிறப்பு பூஜை நடந்தது. காலை 7:30 மணிக்கு, அங்கிருந்து தியாகராஜர் சிலையுடன் உஞ்சவிருத்தி ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக, விழாப் பந்தலை அடைந்தது. காலை 9:00 மணிக்கு, தியாகராஜர் சமாதியில் உள்ள அவருடைய சிலைக்கு, திரவியப் பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், பால் அபிஷேகம் கோலாகலமாக நடந்தது.தொடர்ந்து சுதா ரகுநாதன், புளூட் ரமணி, கத்ரி கோபால்நாத், மகதி, சுமோ சுசீந்திரா, மெகபூப் சுபானி, உமையாள்புரம் சிவராமன், சரண் உட்பட, ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து, தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். தியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ரெங்கசாமி மூப்பனார், செயலர்கள் அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ் மற்றும் உறுப்பினர்கள், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஆராதனையை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதால், இசைப் பிரியர்கள், திருவையாறில் அதிகளவில் முகாமிட்டிருந்தனர். இரவு, 9:00 மணிக்கு முத்துப் பல்லக்கில், தியாகராஜர் ஊர்வலம் நடக்கிறது. 10.30 மணி முதல், 11 மணி வரை, பிரபல பாடகர் ஜேசுதாஸ் பாட்டுக் கச்சேரி நடக்கிறது. பின்னர் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !