உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரவிளக்கு 15-ம் தேதி வந்தது ஏன்?: தேவசம்போர்டு தலைவர் விளக்கம்!

மகரவிளக்கு 15-ம் தேதி வந்தது ஏன்?: தேவசம்போர்டு தலைவர் விளக்கம்!

சபரிமலை: மகரவிளக்கு, இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதிக்கு மாறியது ஏன் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் விளக்கம் அளித்துள்ளார். சன்னிதானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் பொதுவாக, ஜன.,14-ம் தேதி தான், மகரவிளக்கு விழா நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு, ஒரு நாள் தாமதமாக, 15ம் தேதி நடைபெறுகிறது. சூரியன் தனுசு ராசியில் இருந்து, மகர ராசியில் கடக்கும், மகர சங்கரம தினத்தில், மகரவிளக்கு விழாவும் நடைபெறும். இந்த ஆண்டு மகர சங்கரமம், 15-ம் தேதி, அதிகாலை, 12.59 மணிக்கு வருகிறது. 14ம் தேதி என்பது, நள்ளிரவு, 12 மணியுடன் முடிந்து விடுகிறது. மகர சங்கரமம், 15-ம் தேதி அதிகாலையில் வருவதால், அன்று மாலையில், மகர விளக்கு விழா நடைபெறுகிறது. மகர விளக்கு தரிசனத்துக்கு, சன்னிதான சுற்றுப் புறங்களில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில், தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு புல்மேட்டில் நடைபெற்ற சம்பவம், முல்லைப் பெரியாறு சம்பவம் போன்றவற்றால், குமுளி, ஆரியங்காவு வழியாக வரும், தமிழக பக்தர்கள் எண்ணிக்கை, பெருமளவு குறைந்து விட்டது. முல்லைப் பெரியாறு பிரச்னையால், தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோயில்களில், பக்தர்கள் இருமுடி இறக்கி, விரதம் முடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் எல்லாம், வரும் மாதங்களில், சபரிமலை வருவர் என, தேவசம்போர்டு நம்புகிறது. கடந்த 12-ம் தேதி வரை, மண்டல மகர விளக்கு காலத்தில், மொத்த வருமானம், 155 கோடி ரூபாய். இது, கடந்த ஆண்டை விட, 20 கோடி ரூபாய் அதிகம். இந்த வருமானத்தில், 110 கோடி வரை, சீசனுக்காக செலவு செய்யப்படுகிறது. அரவணை, அப்பம் மூல பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க, 45 கோடி, பராமரிப்பு பணிகளுக்காக, 26 கோடி, மின் கட்டணமாக, ஐந்து கோடி, ஊழியர்கள் சாப்பாடு மற்றும் அன்னதானத்துக்காக, ஏழு கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. கேரளாவில் கொட்டாரக்கரை, மலையாளப்புழா, அம்பலப்புழா உள்ளிட்ட, 26 கோயில்களில், பிரசாதங்கள் தயாரிப்பு நவீனப்படுத்தப்பட்டு, பேக்கிங் செய்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொட்டாரக்கரையில் பிப்ரவரி முதல் தேதி முதலும், இதர கோயில்களில், மார்ச் முதல் தேதி முதலும், இது அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !