கிரிகுஜாம்பிகைக்கு புணுகுச்சட்ட தைலக்காப்பு திருநாகேஸ்வரம் கோவிலில் கோலாகலம்!
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிகோவிலில் கிரிகுஜாம்பிகைக்கு புணுகுச்சட்ட தைலக்காப்பு நாளை 15ம் தேதி சங்கராந்தி தினத்தில் தயிர்பள்ளயம், சிறப்பு பூஜையுடன் நடக்கிறது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதசுவாமிகோவில் உள்ளது. கிரிகுஜாம்பிகை இத்தலத்தில் தனிக்கோவில் கொண்டு இலட்சுமியும், சரஸ்வதியும் இருபுறமும் விளங்க முக்கன்னியாக காட்சி தருகிறார். மேலும் சக்கரபீடத்தில் சுயம்பு வடிவமாக தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பிருங்கி மாமுனிவர் உமையம்மையை விடுத்து சிவபெருமானை மட்டுமே தியானித்து தவம் இயற்றினார். அம்முனிவரின் தவத்தை கண்டு சினம் கொண்ட உமையம்மை செண்பகவனத்தில் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் செய்து அவரது வாமபாகத்தை பெற்றாள். அத்தவக்கோலத்தை அடியார்கள் எக்காலமும் தொழ அம்பிகை கிரிகுஜாம்பிகையாக தனிக்கோவில் கொண்டுள்ளார். கல்வி, செல்வம், வீரம் மூன்றும் அம்பிகையை வழிபடுவதால் கிட்டும் என கூறப்படுகிறது. இந்திரன் அகலிகை மீது காமமுற்று குற்றமிழைத்ததால் கவுதம முனிவரின் சாபத்தை அடைகிறான். அதனால் அவன் உடலெங்கும் ஆயிரம் கண்ணாகவும், துர்கந்தமும் உடையவனானான். இந்நிலையைக்கண்டு வருத்தமும் வெட்கமும் அடைந்து தனது குருவாகிய வியாழ பகவானை வணங்கி தனது உடற்பிணி நீங்க வழிகேட்டான். செண்பகவனம் எனும் திருநாகேஸ்வரத்தில் தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ள கிரிகுஜாம்பிகைக்கு தைந்திங்கள் முதல்நாளாம் சங்கராந்தி தினத்தில் புணுகுச்சட்ட தைலக்காப்பு செய்து வழிபாடு செய்து சாபம் நீங்கப்பெற்றான் என்பது ஐதீகம். அதன்படி, ஆண்டுதோறும் இத்தலத்தில் கிரிகுஜாம்பிகைக்கு தைத்திங்கள் முதல்நாளில் தைலக்காப்பும், தயிர்பள்ளயம் சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது. இவ்வாண்டும் ஜனவரி 15ம் தேதி நாளை இரவு 10 மணிக்கு கிரிகுஜாம்பிகைக்கு புணுகுச்சட்ட தைலக்காப்பும், தயிர்பள்ளயம், சிறப்பு பூஜை நடக்கிறது. 16ம் தேதி மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனை தொடக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.