சிவசூரியபெருமான் கோவில் பெருவிழா: ஜன.,22ல் கொடியேற்றம்!
கும்பகோணம்: சூரியனார்கோவில் சிவசூரியபெருமான் கோவிலில் 22ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா உற்சவம் தொடங்குகிறது. கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரகங்கள் முன்னொருகாலத்தில் காலவ முனிவருக்கு தாங்களாகவே அவருடைய துன்பத்தை நீக்கி அருள் செய்தமையால் பெற்ற சாபத்தை நீக்கிக்கொள்ள திருமங்கலக்குடியில் மங்களநாயகி உடனாய பிராணநாதபெருமானை முறையாக வழிபட்டும், சூரியனார்கோவில் அருக்கவனத்தில் தங்கி தவம் இயற்றியும் சாமவிமோசனம் அடைந்தனர். தங்களை வழிபடுவோருக்கு அருள்புரியும் சிறப்பினையும் பெற்று விளங்கும் தலமாக சிவசூரியபெருமான் கோவில் திகழ்கிறது. இங்குள்ள நவக்கிரகமூர்த்திகள் தங்களுக்குரிய வாகனங்களும், ஆயுதங்களும் கொல்லாமல் அன்பர்களுக்கு அருள்தரும் மூர்த்திகளாக காட்சியளிப்பது சிறப்பு. கிரகப்பெயர்ச்சி காலங்களில் நவக்கிரக மூர்த்திகளை விதிப்படி வழிபட்டு நலம்பெறும் தலமாக உள்ளது. சிறப்பு மிக்க இவ்வாலயத்தில் இங்கு ஆண்டுதோறும் தைமாதத்தில் பெருவிழா உற்சவம் நடப்பது வழக்கம். இவ்வாண்டும் வருகிற 22ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. சுவாமிக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது. மாலை மஞ்சத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாநாட்களில் தினசரி காலை மாலை வீதியுலா நடக்கிறது. 27ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 30ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 31ம் தேதி அஷ்டமி தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை காறுபாறு வைத்தியநாதத்தம்பிரான் சுவாமிகள், கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.