உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீடுகளில் வெளியேறும் கழிவு நீர்: திருக்கழுக்கன்றம் ராஜகோபுரத்தில் தேக்கம்

வீடுகளில் வெளியேறும் கழிவு நீர்: திருக்கழுக்கன்றம் ராஜகோபுரத்தில் தேக்கம்

திருக்கழுக்கன்றம்: குடியிருப்பிலிருந்து வெளியேறும் கழிவு நீர், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் வடக்கு மாடவீதி ராஜ கோபுரத்திற்கு அருகில் தேங்குவதால், கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். திருக்கழுக்குன்றத்தில் பல்லவர் பொக்கிஷமாக வேதகிரீஸ்வரர் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அதன் தாழக்கோவிலாக பக்தவச்சலேஸ்வரர் மற்றும் திரிபுர சுந்தரி அம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலுக்கு சுற்றுச்சுவருடன், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு திசைகளில், ராஜ கோபுரங்கள் உள்ளன. இதில், வடக்கு மாட வீதியில், வடக்கு நிலை ராஜ கோபுரம் மற்றும் கோவில் சுற்றுச்சுவரை ஒட்டி, 10க்கும் மேற்பட்ட வீடுகள், ஓட்டல், கடைகள் உள்ளன.

இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர், ராஜகோபுரத்தின் அஸ்திவாரத்தில், நீண்ட காலமாக தேங்குகிறது. இதனால் கோபுர அடிப்பகுதியில், உறுதி தன்மை பாதிக்கப்படுவதுடன், துர்நாற்றம் வீசி, கொசுத்தொல்லையும் அதிகரிக்கிறது. வணங்குதலுக்கு உரிய கோபுரத்தின் அருகே கழிவு நீரை விடுகிறோமே என, இப்பகுதியினர் துளியும் யோசிப்பதில்லை. ஊருக்கே பெருமை சேர்க்கும் கோபுரத்திற்கு, தங்களால் பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது என்ற விழிப்புணர்வு இல்லாமல், காலம், காலமாக இந்த செயல் நடக்கிறது. இதை தடுக்க, கோவில் நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த பிரச்னை தொடர்கிறது. எனவே, இந்து அறநிலையத்துறையினர், பேரூராட்சியினர், வருவாய்த்துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து, கோபுரத்தை காப்பாற்ற, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !