கண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 11:30 மணிக்கு கொடியேற்றம், மாலை 6:30 மணிக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தன. இன்று முதல் தினமும் காலை வெள்ளி கேடயத்திலும், இரவில் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளுகிறார். மே 26 காலை பல்லக்கிலும், இரவில் தங்கரதம், அன்னவாகனம் புறப்பாடும் நடக்கின்றன. மே 27 காலை 8:10 மணிக்கு களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட்டி, 8:25 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளுகிறார். மாலை 6:00 மணிக்கு வெள்ளி ரதம், இரவு வெள்ளி குதிரை வாகனம் புறப்பாடும் நடக்கின்றன. மே 28 காலை 9:10 மணிக்கு தேரோட்டம், இரவு புஷ்ப பல்லக்கு, மே 29 காலை பால்குடம், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், இரவில் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் முயல்குத்தி திருநாள் நடக்கும். மே 30 ல் வெள்ளி ஊஞ்சல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.