குன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்
குன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் திருவிழா விமரிசையாக நடந்தது.குன்னுார் அருகே பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில், கடந்த 17ம் தேதி கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.விநாயகர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கம்பம் சாட்டுதல், கங்கையில் இருந்து அம்மன் அழைப்பு ஆகியவை நடந்தன. மேலும், ஆர்.சி.லைன் முனீஸ்வரர் கோவிலில் இருந்துபுஷ்ப பல்லக்கு ஊர்வலத்தில் அம்மன் பவனி வந்தார்.
நவகிரக பூஜை, அம்மனுக்கு ஆராதனை, உச்சிபூஜை, கஞ்சி வார்த்தல், பிளேக் மாரியம்மன் கோவில், மதுரை வீரர் கோவில்களில் சிறப்பு பூஜை, முத்துப்பல்லக்கு ஊர்வலம், குழந்தைகள் விளக்கு பூஜை, இன்னசை கச்சேரி ஆகியவை நடந்தன. நேற்று கரக உற்சவம், பூகுண்டம் திருவிழா நடந்தது. இதில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூகுண்டம் இறங்கினர். அம்மனுக்கு நவதானியங்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.