வரம் வாங்கும் சுவாமியிடம் தப்பிக்க ஊர் சுற்றும் மக்கள்:மதுரையில் ஆச்சர்யம்!
பல நாள் விரதமிருந்து, உடலை வருத்தி, கஷ்டப்பட்டு கோயிலுக்குச் சென்று சுவாமியிடம் பெற்ற வரத்தை, செல்லும் வழியில் ஒருவர் அபகரித்துக் கொள்வார். என்பதற்காக, மதுரை மக்கள் ஊர் சுற்றி வருகிறார்கள் என்றால் ஆச்சர்யம் தானே. திருவாதவூர் வேதநாயகி திருமறைநாதசுவாமி கோயில் அருகே கண்மாயின் நடுவே கற்தூணில் கம்பீரமாக காட்சி தருகிறார் புருஷாமிருகம். சிங்க உடலும், முனிவர் முகமும் கொண்ட இவர்தான் வரத்தை அபகரித்துக் கொள்பவர் என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களிடையே உள்ளது.இதனால் இந்த ஊர் வழியே அழகர்கோவிலுக்கு சென்று வரம் பெறுபவர்கள், மீண்டும் இவ்வழியே வருவதை தவிர்த்து, மேலூர், வெள்ளரிப்பட்டி, பனைக்குளம் வழியாக ஊர்களை சுற்றி வந்து வீடு சேர்கிறார்கள். உண்மையிலேயே புருஷாமிருக சுவாமி, வரத்தை அபகரிக்கிறாரா என்றால், அதற்கு விடையில்லை. "அந்தக் காலத்தில இருந்த நம்பிக்கை இன்றும் தொடர்கிறது. சுவாமிக்கு விழா எடுத்து வழிபடுகிறோம் என்கிறார் திருவாதவூரைச் சேர்ந்த குமரேசன். திருமறைநாதசுவாமி கோயில் மெய்க்காப்பாளராகவும் இருக்கிறார்.அவர் கூறியதாவது : புருஷாமிருகசுவாமிக்கு புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை "கருப்புசாத்து விழா எடுப்போம். அன்றைக்கு 100 தேங்காய்களை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தீயில் சுட்டு, கருப்பாக்கி, அரைத்து, நல்லெண்ணெய்யை குழைத்து தயாராக வைத்திருப்போம். அன்று மாலை 5 மணிக்கு, ஊர்வலமாக சென்று, புருஷாமிருகசுவாமி மீது, அரைத்த தேங்காய்களை பூசி வழிபடுவோம். அன்றிலிருந்து மழை கொட்ட துவங்கிவிடும். இன்று வரை இந்த நம்பிக்கை பொய்க்கவில்லை, என்றார்.