மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
குளித்தலை: குளித்தலை அருகே, மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், அலகு குத்தி, அக்னி குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். குளித்தலை அடுத்த தோகைமலை அருகே குறிஞ்சிநகரில் பகவதியம்மன் கோவில், வெள்ளப்பட்டியில் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில், கடந்த வாரத்தில் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துதல், ஆடு, கோழி பலியிடுதல் நேற்று நடந்தது. முன்னதாக, பக்தர்கள் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக் குடம் எடுத்துக் கொண்டு, பகவதியம்மன் கோவிலுக்கு சென்றனர். பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அங்கிருந்து, தீர்த்த குடம், பால் குடம், தீச்சட்டி, பால் காவடி, பறவை காவடி மற்றும் கரும்பு தொட்டில்களுடன், பக்தர்கள், ஊர்வலமாக, வெள்ளப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபட்டனர். கிடா வெட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் அளித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவிழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.