உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீரசோழபுரம் கோவிலில் ஆய்வு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீரசோழபுரம் கோவிலில் ஆய்வு

கள்ளக்குறிச்சி; வீரசோழபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ணன் சிலை மாயமானது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில், ௮௦௦ ஆண்டுகள் பழமைவாய்ந்த, வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அறநிலையத்துறை ஆய்வாளர் சரவணன் ஆய்வு செய்தார். அப்போது, கோவிலில் இருந்த, அரை அடி உயரம் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் ஐம்பொன் சிலை, கடந்த ௨ ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனது குறித்து, தெய்வீகன், 53, என்பவர் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக, அறநிலையத்துறை ஆய்வாளர் சரவணன், தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன் தொடர்ச்சியாக, திருச்சி டி.எஸ்.பி., சந்திரசேகரன், துாத்துக்குடி இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வீரசோழபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். கோவில் அர்ச்சகர், முன்னாள் அர்ச்சகர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், வீரசோழபுரத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பழமைவாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இருந்தும் சிலைகள் மாயமானது குறிப்பிடத் தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !