கன்னியாகுமரியில் இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் வருகை குறைவு!
கன்னியாகுமரி : சபரிமலை மகர ஜோதி தரிசனத்திற்கு பின்னர் கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்ததால் சீசன் கடை வியாபாரிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கடும் விரதம் இருந்து கார்த்திகை 1முதல் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் ஆன்மீக சுற்றுலா பயண திட்டத்தில் கன்னியாகுமரிக்கு முக்கிய இடம் உண்டு. இந்த இரண்டு மாதங்களிலும் பல லட்சம் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி வந்து செல்கின்றனர். இவ்வாறு பல்வேறு மாநிலங்களில் இருந்து கன்னியாகுமரி வரும் ஐயப்ப பக்தர்கள் கடல் சிப்பி, அழகு சாதன பொருட்கள், துணி வகைகள், எலக்டராணிக்ஸ் சாதனங்கள் என விதவிதமான பொருட்களை வாங்கி செல்வர். சுற்றுலாப்பயணிகளின் வருகையையொட்டி கன்னியாகுமரி பஞ்., நிர்வாகம் சார்பில் இந்த இரண்டு மாதத்திற்கும் தற்காலிக கடைகள் அமைத்து வாடகைக்கு விடப்படுகிறது. வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் கன்னியாகுமரி வந்து இரண்டு மாதங்கள் வியாபாரம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு கார்த்திகை முதல் வாரத்தில் சீசன் களைகட்டியது. ஆனால் முல்லை பெரியாறு பிரச்னை, தானே புயல், கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்களால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது. வழக்கமாக சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு பின் அடுத்த மூன்று நாட்கள் மட்டும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வருவர். இதை கருத்தில் கொண்டு வியாபாரிகள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து விற்பனைக்காக பொருட்கள் வாங்கி வைப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல் இறுதி கட்ட வியாபாரத்திற்காக பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் வாங்கி வைத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி பக்தர்களின் வருகை இல்லை. மகரஜோதி தரிசனம் முடிந்த பின் இதுவரை இல்லாத அளவிற்கு மிக குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே வந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது: நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். இந்த ஆண்டு துவக்கத்தில் சீசன் நன்றாக இருந்தது. கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதாலும், தானே புயல் பாதிப்பு காரணமாகவும் இங்கு கூட்டம் இல்லை. பொருட்கள் வாங்குவதற்கும், கடை வாடகைக்கு எடுப்பதற்கும் பல லட்சம் ரூபாய் செலவிட்டிருந்தோம். தற்போது வியாபாரம் கணிசமாக குறைந்துள்ளதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என அவர்கள் கூறினர்.