உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்பொழி கோயிலில் வழிபாட்டு முறையில் மாற்றம்: பக்தர்கள் வேதனை!

பண்பொழி கோயிலில் வழிபாட்டு முறையில் மாற்றம்: பக்தர்கள் வேதனை!

கடையநல்லூர் : பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயிலில் தை மாத பிறப்பு தோறும் மாதாந்திர கமிட்டியினரால் நடத்தப்பட்டு வந்த அன்னதானம் மற்றும் சுவாமி சப்பர வீதியுலா நடைபெறாமல் பக்தர்கள் பெரும் வேதனையடைந்துள்ளனர். கடையநல்லூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்று விளங்கும் திருமலைக்குமார சுவாமி கோயிலில் கடந்த சுமார் 50 ஆண்டு காலமாக மாதாந்திர கமிட்டி சார்பில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இதனிடையில் இக்கோயிலில் கார்த்திகை கமிட்டி சார்பிலும் பூஜைகளும், அன்னதானமும் நடந்து வந்தன. இந்நிலையில் கடந்த கார்த்திகை தினத்தன்று கோயில் அடிவாரத்தில் வைத்து தான் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனிடையில் மலைப்பாதை அமைக்கப்பட்டுவிட்ட நிலையில் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் சுவாமியை தரிசிக்க வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பு, கார்த்திகை தினம், கடைசி வெள்ளி ஆகிய 3 தினங்களில் உற்சவருக்கு அபிஷேகம், அர்ச்சனை தீபாராதனை மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் தரிசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மூலவர் சன்னதியில் உள்ள சுவாமியை முக்கிய தினத்தன்று தரிசிக்க ஒருசில நொடிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் ஆதங்கமடைந்த பக்தர்கள் தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்மாத பிறப்பு, கார்த்திகை நட்சத்திரம் மற்றும் கடைசி வெள்ளி ஆகிய தினங்களில் மூலவர் சன்னதியில் அமைந்துள்ள சுவாமிக்கும் மீண்டும் பன்னீர் சாத்துதல், அர்ச்சனை கொடுக்கல் போன்றவற்றை அனுமதிக்க வேண்டும் என முறையிட்டு வருகின்றனர். திடீரென வழிபாட்டு முறையில் ஏற்பட்டுள்ள மாறுதல் பக்தர்கள் மத்தியில் ஆதங்கத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பதை பரவலாக காண முடிகிறது. இதனிடையில் கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் 8 கால பூஜைகளும் முறையாக நடத்தப்பட்டு வரும் நிலையில் முக்கிய தினங்களில் பக்தர்கள் மூலவர் சன்னிதியில் உள்ள சுவாமியை தரிசிக்க இயலாமல் இருப்பது இந்து அமைப்புகள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி தை மாத பிறப்பான பொங்கலன்று மாதாந்திர கமிட்டி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த அன்னதானம் மற்றும் இரவு நேர சுவாமி சப்பர வீதியுலா ஆகியன இடம்பெறவில்லை. முக்கிய தினமாக கருதப்படும் பொங்கலன்று திருமலைக்கோயிலில் அன்னதானம் இருக்கும் என எதிர்பார்த்து வந்த பக்தர்களுக்கு மாதாந்திர கமிட்டி சார்பில் நடத்தப்பட்டு வந்த அன்னதானம் மேற்கொள்ளப்படவில்லை என்ற தகவலையடுத்து பெரும் வேதனையடைந்தனர். இருப்பினும் இக்கோயிலில் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டிருக்கும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும் இரவு நேரத்தில் சுவாமி சப்பர வீதியுலா இருக்குமென எதிர்பார்த்து மலைக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சப்பர வீதியுலா நடக்காததை அடுத்து பெரும் வேதனையடைந்தனர். திருமலைக்குமார சுவாமி கோயிலில் வழிபாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக பக்தர்களால் கூறப்படுவதை அடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைவரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !