உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவில் செப்பு சிலை மாற்றம்: 44 ஆண்டுகளுக்கு பின் தூசு தட்டுறாங்க!

கைலாசநாதர் கோவில் செப்பு சிலை மாற்றம்: 44 ஆண்டுகளுக்கு பின் தூசு தட்டுறாங்க!

தஞ்சாவூர்: தஞ்சை அருகே, கைலாசநாதர் கோவில் செப்பு சிலையை மாற்றியது தொடர்பாக, 44 ஆண்டுகளுக்குப் பின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். தஞ்சை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மற்றும் கைலாசநாதர் கோவில் ஆகியவற்றில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், சமீபத்தில் மூன்று மணி நேரம் ஆய்வு நடத்தினர். அதன் பின், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கூறியதாவது: கடந்த, 1974ல், கோல்கட்டா விமான நிலையத்தில், ஐம்பொன்னாலான, நான்கு நடராஜர் சிலைகள் பிடிபட்டன. இந்த சிலைகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமானது என்பதும், அதில் ஒன்று, தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர், கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்பதும், தெரியவந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போதிலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போது, ஒரு நடராஜர் சிலை, அமெரிக்காவில் உள்ள மியூசியத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது; மற்ற சிலைகள் எங்கு இருக்கின்றன, என, தெரியவில்லை. இதற்கிடையே, அறநிலையத் துறை அதிகாரிகள், கோவில் சிலைகளை சரிபார்த்துள்ளனர்.அப்போது, ஒரு நடராஜர் சிலையின் அமைப்பு மாறி இருந்ததால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 44 ஆண்டுகளுக்கு முன், கோவிலில் இருந்த சிலையை மாற்றி இருப்பதும், அந்த சிலை அமெரிக்காவில் இருப்பதும் தெரிய வந்தது. 1972ல், கைலாசநாதர் கோவிலில் இருந்த சிலை, திருட்டு போய்வுள்ளது.புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட சிலைகளையும் மாற்றி, மோசடி செய்துள்ளனர். அந்த சிலைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 44 ஆண்டுகளுக்கு முன், இந்த சம்பவம் நடந்துள்ளதால், நேரடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது. இது குறித்து, டி.எஸ்.பி., விசாரித்து வழக்குப்பதிவு செய்த பின், அந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்படும். அதன் பின், உரிய விசாரணை செய்து சிலையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !