வன தேவதை திருவிழா: பக்தர்கள் மீது நடந்து பூசாரி ஆசி
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே நடந்த வனதேவை திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட, இருளர் இன மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, பெரியமலை வனப்பகுதியில் வனதேவதை, வனமுனி அய்யனார் கோவில் திருவிழா கடந்த, 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கங்கணம் கட்டி, பச்சை வண்ண ஆடை, பச்சை கலரில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இவர்கள், வீட்டிற்கு செல்லாமல், அப்பகுதியில் உள்ள கோவில்களில் தங்கினர். மேலும், அம்மனை தாய் வீட்டுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில், கொல்லப்பள்ளி இருளர் காலனியில் அம்மன் ஊர்வலம் நடந்தது. காலை மாவிளக்கு ஊர்வலம் சென்று, வனதேவதைக்கு பூக்களால் அலங்காரம் செய்து, வள்ளிக்கிழங்கில் தீபமேற்றி வழிபட்டனர். பின்னர் கரகம் எடுத்த வந்த பூசாரி, வரம் வேண்டி கீழே படுத்தவர்கள் மீது, நடந்து சென்று ஆசி வழங்கினார். ஆடு, கோழிகள் பலியிடப்பட்டன. கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, பொள்ளாச்சி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் பங்கேற்றனர். விழாவில், பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வர, தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.