உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை கோவில் நிர்வாகத்தில் குளறுபடி: திருப்பணிகள் தொய்வு!

சென்னிமலை கோவில் நிர்வாகத்தில் குளறுபடி: திருப்பணிகள் தொய்வு!

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் நிர்வாகத்தில் நிலவும் பல குளறுபடிகளால், திருப்பணிகள் தொய்வு கண்டுள்ளன.சென்னிமலை முருகன் கோவிலில், எட்டு ஆண்டுகளாக பல கோடி ரூபாய செலவில் ஐந்து நிலை ராஜாகோபுரம் மற்றும் திருப்பணி நடக்கிறது. அறங்காவலர் குழு தலைவராக இருந்த யூ.ஆர்.சி.கனகசபாபதி தனது அக்கறையாலும், பல கோவில்களில் திருப்பணி செய்த அனுபவத்தாலும், பக்தர்களுக்கு பல வசதிகளை, நன்கொடை மூலமாகவும், தனது சொந்த செலவிலும் செய்து வந்தார். இவர் நிர்வாகத்தில் இருந்த வரை, கோவில் அதிகாரிகளும், அர்ச்சகர்களும் ஒற்றுமையாக பணியை தொடர்ந்தனர். பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. கோவில் வருவாய் கூடியது.தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, அறங்காவலர் குழுவுக்கு, எவரும் நியமிக்கப்படவில்லை. எனினும், திருப்பணிகளை அவர் தினந்தோறும் கவனித்து வருகிறார். நிர்வாகத்திலோ, அர்ச்சகர்கள் விஷயத்திலோ தலையிடுவது இல்லை.பல ஆண்டுகளாக அமைதியாக நடந்த நிர்வாகத்தில், தற்போது கோஷ்டி பூசல் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. மலைக் கோவிலில் உண்மையான பக்தர்கள் என கூறிகொள்ளும் ஒரு சிலரால், வெளிப்படையாக கோஷ்டி சண்டை வெடித்துள்ளது. அறங்காவலர் குழு தலைவர் பதவியை பிடிக்க ஆளும் கட்சி பிரமுகர்கள் சிலர், நிர்வாகத்திலும், அர்ச்சகர்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.பக்தர்கள் வசதிக்காக பல முன்னணி கோவில்களில் உள்ளது போல் நடைமேடையை, தனது சொந்த செலவில் கனகசபாபதி செய்திருந்தார். சிலர், "அது கூடாது எனக்கூறி, அகற்றினர். அதனால் ஸ்வாமி தரிசனம் செய்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து "மீண்டும் நடைமேடை அமைக்க வேண்டும் என, வேறு சிலர் கோவில் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் குறி சொல்லியும், தலை சுற்றி தேங்காய் உடைத்தும், கோவில் பகுதியை பரிகார தலமாக்கி வரும் ஒருவரும், நிர்வாகத்தில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மலைக்கோவிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. திருப்பணிகள் தொடர்ந்து சிறப்புடன் நடக்கவும், நிர்வாகத்தில் தேவையில்லாமல் குழப்பம் ஏற்படாமல் இருக்கவும். அரசியல் கட்சிசாராத கனகசபாபதியை மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !