60 ஆண்டுக்கு பின் தஞ்சை வந்த ராஜராஜன்: பக்தர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர் : மாயமாகி, 60 ஆண்டு களுக்கு பின் சொந்த மண்ணுக்கு வந்த ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவி ஐம்பொன் சிலைகளுக்கு, பொதுமக்கள், பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தஞ்சாவூர், பெரிய கோவிலில் இருந்த ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள், 60 ஆண்டுகளுக்கு முன் மாயமாகின. இந்த சிலைகள், குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் காலிகோ மியூசியத்தில் இருப்பது தெரிந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், சிலைகளை மீட்டு, நேற்று முன்தினம், சென்னை கொண்டு வந்தனர். நேற்று, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும், கும்பகோணம் நீதிமன்றத்துக்கு, சிலைகள் எடுத்து வரப்பட்டன. தஞ்சாவூர், எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மதியம், 1:00 மணிக்கு சிலைகள், நீதிமன்றம் அருகே வந்த போது, பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள், ராஜராஜ சோழன் வாழ்க என, முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, சிவனடியார்கள் சிவபூத இசைக் கருவிகளை இசைத்து, வரவேற்பு அளித்தனர்.சிலைகளை, அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க, நீதிபதி அய்யப்பன் உத்தரவிட்டதை தொடர்ந்து, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஜ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறியதாவது: பிரசித்தி பெற்ற ராஜராஜ சோழனின் சிலையும், பட்டத்தரசி சிலையும் காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிந்து, மூன்று மாதங்களில் மீட்கப்பட்டுள்ளன. கடத்தியவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், யாராக இருந்தாலும், அவர்களுக்கு, 100 வயதாக இருந்தாலும் சரி; அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பேன். இவ்வாறு அவர் கூறினார். தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு, இரவு, பகலாக, ஷிப்ட் முறையில் துப்பாக்கி ஏந்திய, ஆறு போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என, எஸ்.பி., செந்தில்குமாருக்கு, பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார்.