உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உயர்வும் தாழ்வும் உங்களின் கையில்!

உயர்வும் தாழ்வும் உங்களின் கையில்!

பணக்காரன் ஒருவன், நிறைய செல்வம் சேர்க்கும் ஆசையில் வெளிநாடு செல்ல திட்டமிட்டான். அவனிடம் வேலை பார்த்த மூன்று பணியாளர்களை அழைத்தான். அவர்களுக்கு உரிய சம்பளத்துடன், அன்பளிப்பாகவும் ஒரு தொகையையும் கொடுத்தான். தான் நாடு திரும்பியதும், மறுபடியும் வேலைக்கு அழைப்பதாகவும் வாக்களித்தான். மேலும்,ஊழியர் களிடம் தனக்குள்ள தொடர்பு விட்டுப் போகக் கூடாது என்பதற் காக அவர்களுக்கு கடன் கொடுத்தான். அவர்கள் மூவரும், ஒரே மாதிரியான திறமை உடையவர்கள் அல்ல  என்பதால், அவரவர் திறமைக்கு ஏற்ப பத்தாயிரம்,  ஐயாயிரம், இரண்டாயிரம் என  பணம் கொடுத்து விட்டு புறப்பட்டான்.  சில ஆண்டுகள் சென்றது...

பத்தாயிரம் பெற்ற பணியாளர், வியாபாரம் செய்து நல்ல லாபம் சம்பாதித்தான்.ஐந்தாயிரம் பெற்றவனும் அதே போல் தொழில் செய்து பணத்தை பெருக்கினான். ஆனால், இரண்டாயிரம் பெற்றவனோ, அதை அப்படியே வீட்டு தோட்டத்தில் புதைத்து வைத்தான். ஓராண்டு கழித்து பணக்காரன் நாடு திரும்பினான். பணியாளர்களை அழைத்து நலம் விசாரித்தான். தான் கொடுத்த கடனை பயனுள்ளதாக்கி கொண்ட இரண்டு பணியாளர்களைக் கண்டு மகிழ்ச்சிஅடைந்தான்.  மூன்றாவது பணியாளரிடம் கேட்ட போது,  “கொடுத்த பணத்தில் எனக்கும் இவர்களைப் போல சம்பாதித்திருக்க தெரியும். ஆனால், வட்டியும் முதலுமாக சம்பாதித்த பணம் அத்தனையையும் தாங்கள் கடனுக் காக பறித்துக் கொண்டால் என்ன செய்வது என்று எண்ணி ஏதும் செய்யாமல் மண்ணில் புதைத்தேன்.” என்று கூறினான். இதைக் கேட்ட பணக்காரன் கோபமடைந்தான்.  “உழைக்காமல் சோம்பேறியாக இருந்து விட்டு இப்படி ஒரு சாக்கு வேறா?” என்று அவனை பணியில் சேர்க்கவில்லை.  மற்ற இருவருக்கும், தன் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கினான். இந்தக் கதையில் வரும் பணக்காரன்  கடவுளையும், பணியாளர் கள்  மனிதர்களையும் குறிக்கும்.  மனிதர்கள் ஒவ்வொருவரின்  அறிவு, ஆற்றல், தகுதிஅறிந்து  கடவுள் நல்ல வாய்ப்புகளை வழங்குகிறார். அதைப் பயன்படுத்தி வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் நம் கையில் தான்  இருக்கிறது. கிடைத்த வாய்ப்பைக் கொண்டு  பயனுள்ள விதத்தில் வாழ்ந்தால் கடவுள் மேலும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !