உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆல்கொண்டமால் கோவில் விழா: பக்தர்கள் திரண்டு கொண்டாட்டம்!

ஆல்கொண்டமால் கோவில் விழா: பக்தர்கள் திரண்டு கொண்டாட்டம்!

உடுமலை : உடுமலை சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உடுமலை அருகேயுள்ள சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலில், தமிழர் திருநாள் திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை 5.00 மணி முதல் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. திருப்பூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, திரளான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளின் பாலை கொண்டு வந்து, உற்சவர் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். கால்நடைகளுக்கு நோய் தாக்காமல் இருக்க, மண்ணால் செய்யப்பட்ட மாடு, ஆடு, காளை, குதிரை உருவ பொம்மைகளை வைத்து வழிபாடு செய்தனர். மாட்டுப் பொங்கலன்று பிறந்த கன்றுகளை, கோவிலுக்கு தானமாக வழங்கினர்; நேற்று மதியம் வரை 21 கன்றுகள் தானமாக வழங்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக, அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில், உடுமலை, பொள்ளாச்சி, குடிமங்கலம், செஞ்சேரி மலை உட்பட பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில், போலீசாருடன் இணைந்து தீயணைப்புத் துறையினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். கோவில் செயல் அலுவலர் (பொ) நாகையா, தக்கார் தமிழ்வாணன் மற்றும் அதிகாரிகள், சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று அதிகாலை 5.00 மணிக்கு சிறப்பு அலங்காரம், 6.00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7.00 மணிக்கு மகா தீபாராதனை, 9.00 மணிக்கு சுவாமி திருவீதி உலா, வாணவேடிக்கை உட்பட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !