உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணும் பொங்கல் கொண்டாட்டம்: சுற்றுலா தலங்களில் குவிந்தனர் மக்கள்

காணும் பொங்கல் கொண்டாட்டம்: சுற்றுலா தலங்களில் குவிந்தனர் மக்கள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று, காணும் பொங்கல் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாமல்லபுரம், கோவளம், வேடந்தாங்கல், முதலியார்குப்பம், போன்ற சுற்றுலா தலங்களில், மக்கள் குவிந்தனர். கோவளம் அடுத்த முட்டுக்காடில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு குழாம் உள்ளது. இப்படகு குழாமில், நேற்று, காணும் பொங்கலையொட்டி, சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அனைவரும் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். பழவேற்காடு படகு விபத்தின் எதிரொலியாக, சுற்றுலாப் பயணிகள் அனைவரும், லைப் ஜாக்கெட் அணிந்த பின்னரே, பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். கோவளம் கடற்கரையில் காலை 7 மணியிலிருந்து, சுற்றுலாப் பயணிகள் வரத் துவங்கினர். பகல் ஒரு மணியளவில், நூற்றுக்கணக்கான வாகனங்களில், ஆயிரக்கணக்கானோர் வந்து கடற்கரையை ரசித்தனர். கோவளத்திற்கும், முட்டுக்காடு படகு குழாமிற்கும், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.தனியார் பொழுதுபோக்கு மையங்களான, முட்டுக்காடு எம்.ஜி.எம்., கானத்தூர் மாயாஜால், போன்றவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவிந்தனர்.

பள்ளிக்கரணையை சேர்ந்த காளீஸ்வரி கூறும்போது,"படகு குழாமிற்கு வந்து செல்ல, பஸ் வசதி இருந்ததால் சிரமப்படவில்லை. லைப் ஜாக்கெட் கண்டிப்பாக அணிய வேண்டும் எனக் கூறினர். இது விபத்துகளை தவிர்க்க உதவும் என்றார்.கூடுவாஞ்சேரியை சேர்ந்த முகுந்தன் கூறும்போது,"முட்டுக்காடு படகு குழாமிற்கு, குடும்பத்தினருடன் அடிக்கடி வந்து செல்வேன். காணும் பொங்கலான இன்று, அதிக கூட்டத்தினருடன் படகு சவாரி செல்வது, புதுவிதமான மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.மாமல்லபுரம்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கடற்கரைக் கோவில், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் மற்றும் குடைவரை மண்டபங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் வருகையையொட்டி, டி.எஸ்.பி.,கணேசன் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.கடற்கரை செல்லும் பாதை குறுகலாக இருப்பதால், கடற்கரைக்கு செல்வோர் மட்டும், அவ்வழியே அனுமதிக்கப்பட்டனர். திரும்பி வருவோர் இண்டிகோ ரிசார்ட் வளாகம் வழியே அனுப்பப்பட்டனர். கடற்கரையில் பயணிகள் குளிப்பதை தடுக்க, போலீசார் சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைத்திருந்தனர். இதனால் பயணிகள் குளிப்பது தடுக்கப்பட்டது.கொரியநாட்டை சேர்ந்த ஆசிரியர் லீ கூறும்போது,"பொங்கல் பண்டிகை குறித்து அறிந்து வைத்துள்ளேன். மக்கள் குவிந்ததை பார்க்கும் போது, மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களோடு சேர்ந்து பொழுது போக்கியது, புது அனுபவமாக இருந்தது என்றார். மதுராந்தகம்:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், காணும் பொங்கலையொட்டி நேற்று, பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பகல் 2 மணி வரை, 15 ஆயிரம் பேர் பறவைகள் சரணாலயத்தில், பறவைகளை கண்டு களித்தனர். மலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலிலும், கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !