நத்தம் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
திருத்தணி: நத்தம் முனீஸ்வரர் கோவிலில், நேற்றுமுன்தினம் நடந்த கும்பாபிஷேகத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சிக்குட்பட்ட நத்தம் கிராமத்தில் புதியதாக முனீஸ்வரர் கோவில் கட்டி முடித்து, மகா கும்பாபிஷேகம் முதல்கால யாகபூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாகபூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், யாகசாலை பூஜை மற்றும் முனீஸ்வரர் மூலமந்திர ஹோமம் சுவாமி பிரதிஷ்டை பஞ்சமுக ருத்ர ஹோமம் நடைபெற்றது. நேற்றுமுன்தினம், காலை, 9:00 மணிக்கு, கலச புறப்பாடும், காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலையில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு, சுவாமி வீதியுலா மற்றும் நாடகம் நடந்தது. மகா கும்பாபிஷேக விழாவில், நத்தம், கோரமங்கலம், அகூர், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.