மஞ்சு விரட்டு காளைகளுக்கு மட்டுமா: ஆடுகளுக்கும் தான்!
திருப்புத்தூர்: மாட்டுப் பொங்கல் என்றால் பொங்கலிட்டு மாடு விரட்டுவது என்பது கிராமத்தில் தொன்று தொட்டு நடந்து வரும் வழக்கம். மாடு மட்டுமல்ல ஆடுகளையும் விரட்டத்தான் செய்கிறார்கள். கடந்த மாட்டுப்பொங்கலன்று சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஒன்றியம் மாங்குடியில் கிராமத்தினர் பகல் 2 மணிக்கு மந்தையில் கூடினர். அங்கு சாமி அழைப்பு நடந்தது. கிராம பூஜாரிக்கு சாமி வந்ததால் அங்கிருந்த ஆடுகள் அடைக்கப்பட்ட தொழுவிற்கு வந்தார். முதலில் ஊர்ப் பொதுவிற்கு வளர்க்கப்படும் ஆடுகள் உள்ள தொழுவை சுற்றி வந்து வழிபாடு நடத்தினர். பின்னர் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு ஆடுகளை வழிபட்டனர். பின்னர் வாத்தியங்கள் முழங்க ஆடுகளை அவிழ்த்து விரட்டினர். கூடியிருக்கும் சிறுவர்கள் உற்சாகத்துடன் ஆடுகளை பிடிக்க முயன்றனர். ஆடுகள் துள்ளி குதித்து ஓடி அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றன. பின்னர் கோயில் வீட்டிற்கு சென்று வழிபட்டபின் வீடு வாசல் முன்பு பொங்கலிட்டனர். பின்னர் வழக்கமான முறையில் மாடு அவிழ்ப்பும் நடந்தது.