உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாபநாசம் 108 சிவாலயத்தில் ராஜராஜ சோழன் சிலை மாயம்?

பாபநாசம் 108 சிவாலயத்தில் ராஜராஜ சோழன் சிலை மாயம்?

தஞ்சாவூர்: பாபநாசம், 108 சிவாலயத்தில், மாயமான ராஜராஜ சோழன் உலோக சிலையை கண்டுபிடித்து தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது. கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பிய மனு: ராஜராஜ சோழன் காலத்துக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், தந்தையின் நினைவாக, ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளில், பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்தார். சிவபெருமானை ஆராதித்து, வீதிகளில் உலா வரச் செய்ததுடன், இவ்விழாவை, தன் தந்தையான ராஜராஜ சோழன் தரிசிக்க வேண்டும் என விருப்பம் கொண்டு, அவருக்கு சிலை செய்து, சிவபெருமானை வணங்கியபடி உலாவரும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளார். இதன்படி, பாபநாசத்தில் உள்ள, 108 சிவாலயம் என அழைக்கப்படும், ராமலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் அம்மன் சன்னதியின், வலது புறத்தில் ராஜராஜ சோழனின் உலோக சிலை இருந்த தகவல், கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது. இந்த கல்வெட்டை, தமிழக தொல்லியல் துறை படி எடுத்து வெளியிட்டு உள்ளது. தற்போது, அக்கோவிலில் ராஜராஜ சோழனின் சிலை இல்லை. சிலை தற்போது எங்கு உள்ளது என்பதை கண்டறிந்து மீட்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !