உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுசிக பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

கவுசிக பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

 புதுச்சேரி: கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். புதுச்சேரி சுப்பையா சாலை, ரயில் நிலையம் அருகே கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன ரஜத பந்தன கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி, கடந்த 17ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் யாக பூஜை வேள்வி துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:00 மணிக்கு, 6ம் கால யாகசாலை பூஜை ஆரம்பமானது. தொடர்ந்து கோ பூஜை, சூரிய பூஜை, துவாரக பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டு, 9:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், 9:45 மணிக்கு, கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னின்று நடத்தினார். விழாவில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பரிபாலகர் காதர், ஆலய பிரதான அர்ச்சகர்கள் ஞானசேகர சிவாச்சாரியார், ராஜேஷ்குமார் சிவம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !