உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட சேவை உற்சவம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட சேவை உற்சவம்

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடந்து வரும், நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான நேற்று, கருடசேவை நடந்தது. திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், யோகநரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.அவருக்கு தனி சன்னதி உள்ளது. உற்சவராக தெள்ளியசிங்கர், ஸ்ரீதேவி - பூதேவி நாச்சியாருடன் அருள்பாலிக்கின்றார். நரசிம்ம சுவாமிக்கு, ஒவ்வொரு ஆண்டும், பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் ஜூன்.,23ம் தேதி கொடிேயற்றத்துடன் துவங்கியது. விழாவின் பிரதான நாளான நேற்று, கருட சேவை உற்சவம் நடந்தது. காலை, உற்சவர் சர்வ அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளினார். காலை, 8:00 மணிக்கு, கோபுர தரிசனம் நடந்தது. அதை தொடர்ந்து, கருட வாகனத்தில், மாடவீதிகளை உற்சவர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை காலை, நாச்சியார் கோலத்தில், பல்லக்கு சேவையும்; இரவு, அனுமந்த வாகன சேவையும், 29ம் தேதி, திருத்தேர் திருவிழாவும் நடக்கிறது. ஜூலை, 2ம் தேதியுடன், பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !