தியானலிங்க பிரதிஷ்டையின் 19-வது ஆண்டு தின கொண்டாட்டம்
கோவை: தியானலிங்கத்தின் 19-வது ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (ஜூன் 24) விமரிசையாக கொண்டாடப்பட்டது. யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் தனது உயிர் சக்தியை பயன்படுத்தி 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்தார். தியானலிங்கம் பிற லிங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது. எந்த ஒரு மதத்தையும் சாராமல், ஒரு மனிதர் தனது உயிர்தன்மையை உணர்வதற்காக அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது. தியானலிங்கக் கருவறையில் நாள் முழுவதும் பல்வேறு சமயங்களைச் சார்ந்த மக்கள் தங்கள் சமய உச்சாடனங்களை செய்தனர். காலை 6 மணிக்கு மஹா மந்திர உச்சாடனை ஈஷா பிரம்மச்சாரிகளால் துவங்கப்பட்டது. நமசிவாய மந்திரத்தைத் தொடர்ந்து ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர், ஆசிரமவாசிகள், பொதுமக்கள் பங்கேற்று சக்திவாய்ந்த மந்திர உச்சாடனைகளில் ஈடுப்பட்டனர். சீக்கியர்கள் குர்பானி உச்சாடனங்களையும், கிருஸ்துவர்கள் கிருஸ்துவ உச்சாடனங்களையும், லெபனானைச் சேர்ந்த பாடகர்கள் இஸ்லாம் உச்சாடனங்களையும் செய்தனர். தியானலிங்கத்தில் காலை 6 மணிக்குத் துவங்கிய இந்தக் கொண்டாட்டங்கள், மாலை 6:10 மணிக்கு குருபூஜை மற்றும் நாத ஆராதனை என்னும் இசை அர்ப்பணிப்போடு நிறைவு பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பிரதிஷ்டை தின கொண்டாட்டத்தில் பங்கெடுத்தனர்.
தியானலிங்கம் குறித்து சத்குரு…: ஒரு வடிவத்தைப் பிரதிஷ்டை செய்யும்போது அதற்கு மந்திரப் பிரதிஷ்டை, பிராண பிரதிஷ்டை என இரு வழிகள் உள்ளன. ஒவ்வொரு சக்தி நிலைக்கென்று உள்ள மந்திரங்களை உச்சாடனம் செய்து, பிரதிஷ்டை செய்வது மந்திரப் பிரதிஷ்டை. உயிர் சக்தி கொண்டு, நேரடியாகச் சக்தி நிலையில் பிரதிஷ்டை செய்வது பிராணப் பிரதிஷ்டை. தியானலிங்கம் அதீத சக்தி கொண்டு பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்குக் கிட்டத்தட்ட மூன்றாண்டு கால தீவிர சாதனை தேவைப்பட்டது. எத்தனையோ இடையூறுகளைத் தாண்டி, தியானலிங்கம் 1999, ஜுன் 24-ம் தேதி பூரணமான நிலையில் இந்த உலகுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தியானலிங்கம், யோகக் கலையின் அதி தூய்மையானதொரு வெளிப்பாடு.
தியானலிங்கம் தனித்துவமான சக்தி கொண்டது. ஒரு மனிதனின் உடல், மனம், சக்தி என்ற எல்லா நிலைகளிலும் தியானலிங்கம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தியானத்திற்கான தீட்சை தரவல்லது தியானலிங்கம். அதற்கான விதை உங்களுக்குள் விதைக்கப்படுகிறது. ஒரு சரியான சூழ்நிலையை உருவாக்கினால் அது விரைவில் அதன் உச்சநிலையை எட்டுகிறது. இல்லாவிட்டால் அந்த விதை காலம் வரும்வரை காத்திருக்கும். ஆனால் ஒருமுறை தியானலிங்கத்தின் முன்னர் அமர்ந்து அந்த ஆன்ம விதை உங்களுக்குள் விதைக்கப்பட்டால் அதை யாராலும் அழிக்க முடியாது. பிறப்பும், இறப்பும் கூட அந்த விதையை அழிக்க முடியாது. அது வளர்வதற்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்கும்.
மேலும் தொடர்புக்கு: 9043597080.