மீனாட்சி அம்மன் கோயில் ஒட்டகம் சிவா உடல் அடக்கம்: புதிய ஒட்டகம், குதிரை வாங்க ஏற்பாடு
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஒட்டகம் சிவா மாரடைப்பால் நேற்று முன்தினம் இரவு இறந்தது. கோயிலுக்கு சொந்தமான கூடல் செங்குளம் நந்தவனத்தில் சிவா உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. புதிய ஒட்டகம், குதிரை வாங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்து கோயில்களில் யானை, ஒட்டகம், காளை, குதிரை பயன்படுத்துவது குறித்து மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது: இறைவன் குடிகொண்டிருக்கும் கோயில்களில் அனைத்து ஜீவராசிகளும் சமமே என்ற தத்துவத்தை உணர்த்தும் நோக்கிலேயே கோயிலில் யானை, ஒட்டகம், காளை, குதிரை வளர்க்கப்படுகிறது. ஆகம விதிகளின் படி கோயில் திருவிழாக்கள், சுவாமி ஊர்வலங்களில் இவை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்,என்றார்.
மீனாட்சி அம்மன் கோயில் யானை அங்கையற்கண்ணி உடல் நலக்குறைவால் இறந்தது. பின் கோயில் சார்பில் பார்வதி என்ற யானை வாங்கப்பட்டது. இக்கோயிலுக்கு தெற்கு ஆவணி மூலவீதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ராஜேந்திர பிரபு, புனேயில் இருந்து மூன்று ஒட்டகங்களை 2000ம் ஆண்டில் வாங்கி கொடுத்தார். அதில் ஒன்று தான் நேற்று முன்தினம் இறந்த 30 வயதுள்ள ஒட்டகம் சிவா. கோயிலுக்கு புதிதாக ஒட்டகம், குதிரை வாங்கித்தர தயாராக இருப்பதாக ராஜேந்திர பிரபு மகன் பிரபாகரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: புனேயில் இருந்து ஒட்டகம் வாங்கி ரயிலில் ஒன்பது நாள் பயணம் செய்து மதுரைக்கு கொண்டு வர வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 கிலோ கொண்டைக்கடலை, 30 கிலோ கோதுமை தவிடு உணவு கொடுத்தால் தான் ஒட்டகம் சோர்வடையாமல் இருக்கும். 90 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இந்தி பேசுவோரிடம் பழகிய ஒட்டகம் தமிழ் பேசுவோரிடம் சுலபமாக பழகாது. எனவே இந்தி பேசும் பயிற்சியாளர் இருவரை ஒட்டகத்துடன் அழைத்து வர வேண்டும். இருவருக்கும் தலா நாள் ஒன்றுக்கு 1,500 ரூபாய் சம்பளம் தர வேண்டும். தமிழ் பேசுவோரின் கட்டளையை புரிந்து கொள்ளும் வரை ஒட்டகத்தை 30 முதல் 60 நாட்கள் பழக்க வேண்டும்.
யானையை சொல்படி கேட்க பழக்கப்படுத்துவது போல் ஒட்டகத்திற்கும் சில மூர்க்கமான பயிற்சிகள் உண்டு. இதன்படி மூக்கில் கூர்மையான குச்சிகளை சொருகுவர். அதில் கயிற்றை கட்டி அங்கும், இங்குமாக இழுப்பர். கயிறு இழுவைக்கு ஏற்ப ஒட்டகம் தனது நடையை மாற்றி நடந்து செல்லும். ஆக ஒட்டகம் வாங்கவும், பழக்கப்படுத்தவும் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். பொள்ளாச்சி குதிரை பண்ணையில் உயர் ரக குதிரை ஒன்றின் விலை 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒட்டகம், குதிரை வாங்கித்தர தயார். எனினும் கோயில் நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்றார். மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: ஒட்டகம் சிவா உடல், கூடல் செங்குளம் நந்தவனத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கோயிலுக்கு புதிதாக ஒட்டகம், குதிரை வாங்கித்தர விரும்புவோர் உரிய முறையில் விண்ணப்பிக்கலாம், என்றார்.