நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் சிவன் கோவிலில் மழை வேண்டி திருக்கல்யாண வைபவம் நேற்று மாலை நடந்தது. காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளாசியுடன், கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் தெய்வங்களான விநாயகர், சிவன், அம்மன், வள்ளி தெய்வானை செல்வமுருகன், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கோ பூஜை செய்து வைத்தனர்.
மாலை சிவன், அம்மன் உற்சவமூர்த்திகளுக்கு மலர்மாலை அலங்காரம் செய்தபின், திருக்கல்யாண வைபவம் துவங்கியது. விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவஜனம், அங்குரார்பனம், கங்கனம் அணிவித்தல் பூஜைகளுக்குப்பின், யாகம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. வேத பாராயணம், ருத்ர ஜபம், அலங்கார தீபங்கள், பெண்களுக்கு சுமங்கலி தாம்பூலம், 108 அகல் தீபம் ஏற்றுதல் வழிபாடுகள் நடத்தினர். மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியம் நீலமங்கலம் கிராம மக்கள், இத்திருக்கல்யாண உற்சவத்திற்கான ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.