செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
நாமக்கல்: நாமக்கல் அடுத்த, முதலைப்பட்டி விநாயகர், செடல் மாரியம்மன், பங்காரு பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 3ல் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. அன்று காலை முதற் கால யாக பூஜை; மறுநாள் காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை செய்து, கும்பங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 9:15 மணிக்கு விநாயகர் கோபுரத்திற்கும், பரிவார தெய்வங்களுக்கும், ஸ்ரீதேவி, பூமாதேவி, பங்காரு பெருமாள் கோவில் கோபுர கலசங்களுக்கு பட்டாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். காலை, 9:30 மணிக்கு செடல் மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். தொடர்ந்து மஹா கணபதி, நவக்கிரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.