உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!

பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!

நபிகள் நாயகம் இரக்க குணமும், இளகிய மனமும் கொண்டவராக இருந்தாலும் உழைக்க முடிந்த ஒருவன் பிச்சை எடுத்து சோம்பேறியாவதை விரும்பாதவர். ஒருசமயம் நாயகத்திடம் பண உதவி கேட்டு வந்தார் ஒருவர். அவரிடம், “உம்மிடம் உடைமைகள் ஏதாவது உள்ளதா?” என்று நாயகம் கேட்டார். “என்னிடம் தண்ணீர் குடிக்க உதவும் கிண்ணம் ஒன்றும், படுக்கை விரிப்பும் தான் உள்ளன. வேறு எதுவுமில்லை” என்று பதிலளித்தார். அவை இரண்டையும் கொண்டு வரும்படி நாயகம் உத்தரவிட்டார். “இவற்றை வாங்க யாராவது தயாராக இருக்கிறீர்களா? என்று தங்கள் தோழர்களிடம் கேட்டார். அதற்கு ஒருவர், இரண்டு ரூபாய் தருவதாகச் சொன்னார். அவரிடம் நாயகம் அந்தப் பொருட்களை விற்றார். பின் அந்த மனிதரிடம்,“இந்த பணத்தில் உமக்கு உணவும், ஒரு கயிறும் வாங்கிக் கொள்ளுங்கள். வயிறார சாப்பிட்டுவிட்டு காட்டுக்குச் சென்று விறகு சேகரித்து வந்து கடைத் தெருவில் விற்பனை செய்து பிழையுங்கள்” என்று கூறி அனுப்பினார். சில நாட்கள் நகர்ந்தன. அந்த மனிதர் நாயகத்தை சந்திக்க வந்தார்.  “நீங்கள் சொன்னபடியே செய்தேன். இப்போது என்னிடம் 15 ரூபாய் உள்ளது. இதை வைத்து என் தொழிலை பெருக்கிக் கொண்டு மேலும் சம்பாதிக்க போகிறேன். என்னிடமிருந்த உழைப்பு இவ்வளவு நாளாய் எனக்கே தெரியாமல் இருந்தது. அதற்காக நான் வெட்கப்படுகிறேன்” என்றார். இதைக்கேட்டு புன்னகைத்த நாயகம், “இப்போது சொல்லுங்கள் தோழரே... எது மிகவும் போற்றத்தக்கதும், அறிவுடைமையும் ஆகும்? உழைப்பா? பிச்சை எடுப்பதா...? உழைப்பு தான் அறிவுடைமை. அது தான் மனிதனுக்கு அழகு” என்று சொல்லி அவரை வாழ்த்தி அனுப்பினார். இதே போல் மற்றொரு சம்பவம் கூட நடந்திருக்கிறது.

நாயகம் கடைசியாக ஹஜ் பயணம் செய்ய மதீனாவிலிருந்து மெக்காவுக்கு சென்றிருந்தார். அங்கே தர்மம் செய்து கொண்டிருந்த போது, யாசகர்களின் கூட்டத்தில் நின்ற இருவர் மீது அவரின் பார்வை சென்றது. அவர்கள்  இருவரும் தேக பலமுள்ளவர்களாக இருந்தனர். அவர்களை நோக்கி, “இதோ பாருங்கள், நீங்கள் விரும்பினால், நான் உங்களுக்கு இதிலிருந்து கொஞ்சம் தர இயலும். ஆனால் கண்ணியமாக பிழைக்க விரும்புங்கள். உடலில் பலம் உள்ளவர்களுக்கு இந்தப் பொருளில் பங்கில்லை. உழைப்பே  எப்போதும் உத்தமமானது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !