உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து

ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து

திருப்பதி: திருமலை, ஏழுமலையான் தரிசனம், நாளை (ஜூலை 10) மட்டும், ஐந்து மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


ஆந்திர மாநிலம், திருப்பதி, திருமலையில், வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன், ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, வரும், 17ல், திருமலையில், ஆனி வார ஆஸ்தானம் எனப்படும், புதிய கணக்கு துவங்கும் உற்சவம் நடக்க உள்ளது. அதையொட்டி, நாளை (ஜூலை 10), ஏழுமலையான் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட உள்ளது. எனவே, அன்று காலை, 6:00 மணி முதல், 11:00 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


புதிய இடம்: திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக, தேவஸ்தானம் திருமலையில், நான்கு முடி காணிக்கை செலுத்தும் இடங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், பக்தர்கள் வருகை அதிகம் உள்ள நாட்களில், தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்த, பக்தர்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிஉள்ளது.  அவர்களின் சிரமத்தை குறைக்க, தேவஸ்தானம், கருடாத்திரி நகர் சோதனை சாவடி அருகில் உள்ள ஹில்வியூ காட்டேஜ் பகுதியில், நேற்று புதிய முடி காணிக்கை செலுத்தும் பகுதியை துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !