13ம் நூற்றாண்டு சிவன் கோவில் பாதுகாக்க தொல்லியல் துறை பரிந்துரை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்,காளையார்கோவில் அருகே, 13 ம் நுாற்றாண்டு சிவன், பெருமாள் கோவில்கள் சிதிலமடைந்து உள்ளன. அவற்றை பாதுகாக்க, அரசுக்கு தொல்லியல் துறை பரிந்துரை செய்தது. இக்கோவில்கள், காளையார்கோவிலில் இருந்து, 10 கி.மீ.,ல் முடிக்கரை காட்டுப்பகுதியில் உள்ளன. இரு கோவில்களும், கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.
சிவன் கோவிலில் அகத்தீஸ்வரர் சுவாமி, சொர்ணவள்ளி அம்மன், நந்தி சிலைகள் உள்ளன. அங்கிருந்த வீரமாகாளியம்மன் சிலையை, 25 ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் வெளியே எடுத்து, தனிக்கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.அங்கிருந்து, 300 மீ., துாரத்தில், பெருமாள் கோவில் உள்ளது. உதாரப்பெருமாள், அலமேலுமங்கை உபயநாச்சியாள்அம்மன் சிலைகள் உள்ளன. கோவில் சிதிலமடைந்ததால், மூன்று ஆண்டுகளுக்கு முன், அச்சிலைகளை வெளியே வைத்து உள்ளனர்.இரு கோவில்களிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பாண்டியர், சோழர் கால கல்வெட்டுகள் என தெரியவந்துள்ளது. தொல்லியல் துறையினர் கூறியதாவது: கோவில் கல்வெட்டுகளை, மூன்று கட்டமாக படியெடுத்தோம். முடிக்கரை, ஆரம்பக் கட்டத்தில், ஞானசம்பந்த நல்லுார் என்று அழைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் நினைவாகவே இந்த ஊர் உருவாகியிருக்கலாம். கல்வெட்டுகளை பார்க்கும் போது, கோவில்கள், 13ம் நுாற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்தால் தான், நிலவரம் தெரியும். முதற்கட்டமாக, சிவன் கோவிலை பாதுகாக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.