உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தேனி : ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் நடை அதிகாலை 4:30 மணிக்கு தலைமை பூஜாரி காமுத்துரை தலைமையில் திறக்கப்பட்டது. பின்னர் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு காலபூஜை, தீபாராதனை நடந்தது. அதன்பின், திருமஞ்சனம், மஞ்சள் நீர், பச்சரிசிமாவு உள்ளிட்ட 11 அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

அணையா விளக்கு: கோயில் வளாகங்கள், அர்த்த மண்டபங்கள், மூலவர் அறைகளில் தீபம் ஏற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. கோயிலில் உற்சவர் பிரகாரத்திற்கு முன், பகதர்களால் நெய் ஊற்றப்பட்டு அதன் மூலம் எரிந்துகொண்டே இருக்கும் அணையா விளக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், பெண்கள் ஏராளமானோர் நெய் இட்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர். கவுமாரியம்மனை தரிசனம் செய்தனர்.

பிளாஸ்டிக் தடை: கோயில் வளாகத்தில் பக்தர்களின் அபிஷேக பொருட்களை கண்காணிக்க பெண் போலீசார் 18 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள், பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி, உடனுக்குடன் அப்புறப்படுத்தினர்.

* தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கொண்டுவரப்பட்ட 1,008 செர்ரிப் பூக்களால் மூலவர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

* தேனி என்.ஆர்.டி., நகர் கணேச கந்தபெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில் , அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயில், வேல்முருகன் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், கோட்டூர் அங்காளஈஸ்வரி கோயில், வீரப்ப அய்யனார் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் உள்ள மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. சுருளிமலை பழநிமலை பாதயாத்திரை குழு பெண்கள் பஜனைப் பாடல்கள் பாடினர். எலுமிச்சை பழத்திலான விளக்குகளை அம்மன் முன் வைத்து ஏராளமானோர் வழிபட்டனர்.

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை கவுமாரியம்மன், கம்பம்ரோடு காளியம்மன், திரவுபதி அம்மன், பள்ளத்து காளியம்மன், தண்டுப்பாளையம் காளியம்மன், வடகரை பகவதியம்மன்கோயில்களில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அபிேஷகம் ,ஆராதனை நடந்தது.பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !