உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேசுவது கிளியா... இல்லை பெண்ணரசி மொழியா

பேசுவது கிளியா... இல்லை பெண்ணரசி மொழியா

ஒரு முறை சங்கரமடத்தில் சவுந்தர்ய லஹரி குறித்து பேசினார் காஞ்சிப்பெரியவர். பக்தர்கள் சுவாரஸ்யத்துடன் கேட்கத் தொடங்கினர்.  “ஆதிசங்கரர் எழுதிய ஸ்லோகங்களில் கற்பனை வளம் கொட்டிக் கிடக்கிறது. அம்பிகை ஸ்தோத்திரமான சவுந்தர்ய லஹரியில் அவர் அழகான நாடகத்தை நம் கண் முன்னர் நிகழ்த்திக் காட்டுகிறார். ஒருமுறை அம்பிகையின் முன்னிலையில் வீணைக் கச்சேரி நடந்தது. வீணை வாசித்த வித்வான் யார் தெரியுமா? சாட்சாத் சரஸ்வதி தேவி தான். அம்பிகை இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். வேலை, குடும்பம் என்ற எந்த சிந்தனை ஏதுமின்றி ’அக்கடா’ என்று தானே நாம் கச்சேரிக்குச் செல்வோம்? அம்பிகையும் இப்படித் தான் ரசித்துக் கேட்டாள்.  

சிவனின் பெருமைகளை சரஸ்வதி வீணையில் வாசித்ததாக ஸ்லோகம் சொல்கிறது. கதைகளை, லீலா வினோதங்களை பாட்டில் தானே சொல்ல முடியும்?  இசையில் எப்படி சொல்ல முடியும்? எனவே சரஸ்வதி பாடிக் கொண்டே வீணை வாசித்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  தன் கணவரின் பெருமையை வீணையில் இசைப்பதால் அம்பிகை மகிழ்ச்சியில் திளைக்கிறாள். ஒரு கட்டத்தில் தன்னை மறந்து ’சபாஷ் பலே! பலே!’ என்று பாராட்டுகிறாள். சாதாரண வித்வான்கள் தங்களை விட இன்னொருவரிடத்தில் திறமை இருப்பதை ஏற்பதில்லை. ஆனால் சரஸ்வதி அப்படிப்பட்டவள் அல்ல... அம்பிகையின் பாராட்டு மொழிகளான ’சபாஷ்! பலே! பலே!சூ என்ற வார்த்தைகளின் இனிமைக்குத் தன் வீணையின் நாதம் ஈடுஇணையில்லை என இதயப்பூர்வமாக ஏற்றாள். அதன்பின் வீணையை உறையிட்டு மூடி வைத்ததாகச் சொல்கிறார் ஆதிசங்கரர். அம்பிகையின் குரல் இனிமையைச் சொல்ல அவர் நடத்திக் காட்டும் கவிதை நாடகம் இது! சூரியன் முன் விட்டில் பூச்சி பறந்து காட்டியது போல, இனிய குரல் கொண்ட அம்பிகை முன் கானவித்தை காட்டினோமே என்று சரஸ்வதி  தலைகுனிந்த தாகவும் சொல்கிறார் சங்கரர்” என்றார் காஞ்சிப்பெரியவர்.  அம்பிகையின் குரலின் இனிமையை அறிந்த பக்தர்கள் ’பேசுவது கிளியா... இல்லை பெண்ணரசி மொழியா’ என எண்ணி மகிழ்ந்தனர். திருப்பூர் கிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !