கந்தப்பெருமான் கோவில் கிரிவல பாதை: கால்கோள் விழா சிறப்பு பூஜை
அனுப்பர்பாளையம்: கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவிலில் கிரிவல பாதை அமைக்க, கால்கோள் விழா சிறப்பு பூஜைகள், நேற்று நடந்தன. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலமாக, திருப்பூர் – காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் உள்ளது. இக்கோவில், மக்கள் நல அறக்கட்டளை சார்பில், பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதில், ஒன்றாக, பக்தர்கள் கிரிவலம் செல்லும் வகையில், பாதை அமைக்கப்படுகிறது. அதற்கான கால்கோள் விழா சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அறக்கட்டளை தலைவர் ‘மெஜஸ்டிக்’ கந்தசாமி, செயலாளர் அழகேந்திரா கணேசன், பொருளாளர் துரைசாமி, கவுரவ தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் ராஜாமணி, துணை செயலாளர் தேவசாமி, கவுரவ ஆலோசகர் பாலசுப்பிரமணியம் மற்றும் உறுப்பினர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.
அறக்கட்டளை தலைவர் ‘மெஜஸ்டிக்’ கந்தசாமி கூறியதாவது: கோவிலை சுற்றி சுற்றுசுவர் எழுப்பப்பட்டுள்ளது. ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் கட்டப்பட்டுள்ளது. வர்ணம் பூசுதல், கல் தளம் அமைத்தல், கிரானைட் கல் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கிரிவல பாதை தார் தளத்தில், 500 மீட்டருக்கு அமைக்கப்படுகிறது. இரு பக்கமும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு, மரக்கன்று நடப்படும். வெளியூர் செல்லும் பக்தர்கள் இனி கந்தப்பெருமான் கோவிலில் கிரி வலம் செல்லலாம். கும்பாபிஷேகம் தை மாதம் நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.