சதுரகிரி ஆடி அமாவாசை விழா பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை விழாவிற்காக பக்தர்கள் செல்ல, ஆறு நாட்கள் அனுமதி வழங்கப்படும், என, விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை விழா, ஆக., 9 முதல், 11 வரை நடக்கிறது. விழாவிற்கு சில நாட்கள் முன்னதாகவே பக்தர்கள் அடிவாரத்தில் முகாமிட்டு, அன்னதானம் வழங்கி, மலையேறி தரிசனம் செய்து திரும்புவர்.
பல லட்சம் பக்தர்கள் திரளும், இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தலைமையில், அதிகாரிகள் பார்வையிட்டனர். மலை அடிவாரத்தில் பக்தர்கள் தங்கும் இடங்கள், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமையும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்களை பார்வையிட்டனர்.கலெக்டர் சிவஞானம் கூறியதாவது:இங்கு, பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டில்களுக்கு மட்டும் சில நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்படும். தனியார் வாகனங்கள், 7 கி.மீ.,க்கு முன்பாகவே மைதானத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மூலமாக அடிவாரம் செல்ல வேண்டும்.பக்தர்களின் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர். விழா, ஆக., 9ல் துவங்கி, 11ல் முடிகிறது. அதற்கு, இரண்டு நாட்கள் முன்னும், ஒரு நாள் பின்னும் என, ஆறு நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.