தஞ்சை பெரியகோவில் அடித்தளம் பாதிப்பை தவிர்க்க புது தரைதளம்
தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரியகோவில் அடித்தளம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே, புதிய தரைதளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என, இந்திய தொல்லியல் துறையின் தென்னிந்திய சரக இயக்குனர், நம்பிராஜன் தெரிவித்தார். தஞ்சாவூர் பெரியகோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும், திருப்பணிகளை நேற்று பார்வையிட்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் பெரியகோவிலில் திருப்பணி நடந்து வருகின்றன. தரைதளத்தில் உடைந்து போன செங்கற்கள் வழியே தண்ணீர் உள்ளே செல்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், அடித்தளத்துக்கே பாதிப்பு ஏற்படும். எனவே, அக்காலத்தில் என்ன மாதிரியான கற்களைப் பயன்படுத்தி, தளம் அமைக்கப்பட்டதோ, அதே கற்களைக் கொண்டு, இரு அடுக்குகளாக அமைக்கப்படுகிறது.
இது, பாரம்பரியத் தொழில்நுட்ப முறைப்படி செய்யப்படுகிறது. மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே செல்வதைத் தவிர்க்க, வெளிப்புறம் செல்லும் விதமாக சாய்வான தளம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே, இப்பணியால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. இக்கோவில் கோபுரங்களில் மழை பெய்வதன் மூலம், பாசி படிந்து கறுப்பாக மாறியுள்ளது. இது, கற்களையும், கற்களுக்கு இடையே உள்ள இணைப்புகளையும் சிதைத்துவிடும். எனவே, பாசியை அகற்றுவதற்காக, தொல்லியல் துறையின் அறிவியல் பிரிவு பணியாற்றி வருகிறது.இதில், இலகுவான வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி பாசியை நீக்கித் துாய்மை செய்யப்படுகிறது. கோவிலில் முன், தோண்டப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை மூட வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்யப்படும். தஞ்சாவூர் பெரியகோவில் வளர்ச்சிப் பணிக்காக ஆண்டுதோறும் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.