சைவம், அசைவத்துடன் அன்னதானம்: 20 ஆண்டு சேவையில் அருப்புக்கோட்டை அரும்புகள்
அருப்புக்கோட்டை: நம் கலாசாரத்தில் பாரம்பரியமாக கடை பிடிக்கப்பட்டு வருவது அன்னதானம். அன்னதானத்தில் தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும்.அன்னதானம் கொடுப்பவர்களும் சரி, பயன்பெறுவோர்களும் சரி. இருவருக்கும் மன திருப்தி அளிப்பது இது ஒன்று தான். அக்காலத்தில், அன்னதானம் வழங்குவதை போட்டி போட்டுக் கொண்டு நம் முன்னோர்கள் செய்துள்ளனர். தமிழக அரசு கோயில்கள் தோறும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
அனைத்து கோயில்களிலும் இது தொடர்ந்து நடந்து வருகிறது. எவ்வளவு நகை, பணம் மற்றும் பொருட்கள் கொடுத்தாலும் போதாது என்று சொல்கிறவர்கள், அன்னதானத்தில் மட்டும் தான் திருப்தி அடைந்து போதும் என்கின்றனர். சிறப்பு வாய்ந்த அன்னதானத்தை அருப்புக்கோட்டை நண்பர்கள் ஆட்டோ குழுவும், ஓட்டல் பானு மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ‘அருப்புக்கோட்டை அரும்புகள்’ என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்துவழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாத பவுர்ணமி அன்று சைவ சாப்பாடும், மறுநாள் அசைவ சாப்பாடும் வழங்கி வருகின்றனர். சதுரகிரி மகாலிங்கம்கோயிலிலும் இந்த அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு வரும் பக்தர்கள் யாரும் இதுவரை அன்னதானம இல்லை என்று திரும்பி சென்றதில்லை. அந்த அளவிற்கு சிறப்பாக நடத்துகின்றனர்.