விருதுநகர் கோயில்களில் ஆடி பெருக்கு
ADDED :2620 days ago
விருதுநகர்: ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத் தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடி வருகின்றனர்.காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கம். விருதுநகரிலும் ஆடிப்பெருக்கு வெயிலுகந்தம்மன் கோயில், மாரியம்மன் கோயில், துள்ளுமாரியம்மன் கோயில், எரிச்சநத்தம் மாசாணி அம்மன் தியான பீடத்திலும் சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிப்பட்டனர். பெண்கள் மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை செய்தனர். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத்தாலி முடிந்து கொண்டனர். விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் வாழ வைக்கிற அம்மனக்கு பொங்கல் படையல் செய்து தானம் செய்தனர்.